மதுரை அழகர்கோயிலுக் குண்டான நேர்த்திக்கடனை இங்கே செலுத்தலாம்.
கல்வி வழிபாடு: இக்கோயிலில் கல்வி தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி இருவரும் அடுத்தடுத்து காட்சியளிக்கின்றனர்.
திருவோணத்தன்று ஹயக்ரீவருக்குதேனபிஷேகத்துடன் விசேஷ பூஜை நடக்கிறது.படிப்பில் மந்தம், ஞாபகமறதி, பேச்சுகுறைபாடு உள்ளவர்கள் இந்நாளில் ஹயக்ரீவருக்கு தேங்காய், நாட்டுச்சர்க்கரை, நெய் சேர்ந்த கலவையை படைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள்.
தன்வந்திரிக்கும் தனி சன்னதி உள்ளது. அமாவாசைதோறும் மூலிகை தைலாபிஷேகம், மூலிகை லேகியம் படைத்து தன்வந்திரிக்கு பூஜை நடக்கிறது. இங்குள்ள சக்கரத்தாழ்வாரும் விசேஷ மானவர். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகள் உள்ளனர். இவருக்குப் பின்புறம் உள்ள நரசிம்மரை சுற்றிலும் அஷ்ட லட்சுமிகள் உள்ளனர். இத்தகைய அமைப்பைக் காண்பதுஅபூர்வம். விஷ்வக்ஸேனர், இரட்டை விநாயகர், பெருமாளின் தசாவதாரம், லட்சுமி நரசிம்மர், வேணுகோபாலர், ஆஞ்சநேயர், சொர்ண பைரவர் ஆகியோருக்கும் சன்னதி உண்டு.
சிற்பங்களின் சிறப்பு: இதை "சிற்பக்கோயில்' என்று சொல்லு மளவுக்கு பிரமாண்டமான கலைவண்ணங்களைக் காணலாம். தாயார் கல்யாண சவுந்திரவல்லி தனி சன்னதியில் இருக்கிறார். இவளது சன்னதி முகப்பில், நின்ற நிலையில் விநாயகர், விஷ்ணு துர்க்கை மற்றும் சங்கநிதி, பதுமநிதி உள்ளனர்.இச்சன்னதி முன் மண்டபம் சிற்ப சிறப்பை வெளிப்படுத்தும் கலைக் கூடமாக வடிக்கப் பட்டுள்ளது. இங்குள்ள தூண்களில் உலகளந்த பெருமாள், நரசிம்மர், வைகுண்டநாதர், வேணு கோபாலர், கருடன் மீது அமர்ந்த பெருமாள், ராமரை தோளில் சுமந்த ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஊர்த்து வதாண்டவர், ஊர்த்து வகாளி, அகோர வீரபத்திரர், ரதி, கார்த்தவீரியார்ஜூனன் ஆகிய சிற்பங்கள் உள்ளன.
திருவோண தீபம்: மூலஸ்தானத்தில் சவுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். கள்ளழகரே இங்கு எழுந்தருளியிருப்பதாகக் கருதப்படுவதால், மதுரையைப் போலவே, இங்கும் சித்ராபவுர்ணமியன்று சுவாமி குடகனாற்றில் இறங்குகிறார். இவ்விழாவின் போது மண்டூகருக்கு சுவாமி அருளிய வைபவம் பாவனையாக நடக்கும். ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தன்றும் சுவாமி பாதத்தில் திருவோண தீபம் ஏற்றப்பட்டு விசேஷ பூஜை நடக்கும். பின், தீபம் முன்னே செல்ல, உற்சவமூர்த்தி பின்னே வலம் வருவார். இந்த தரிசனத்தைக் காண்பவர்கள் பாவவிமோசனம் பெறுவர் என்பது நம்பிக்கை. ஆடியில் பிரம்மோற்ஸவம் நடக்கும். ஆடி பவுர்ணமியன்று சுவாமி தேரில் எழுந்தருளுவார்.பொருளாதார சிக்கல் தீர சொர்ண ஆகஷ்ண பைரவர் அருள் தருகிறார்.
No comments:
Post a Comment